தீபாவளி முடிந்தும் கோ-ஆப்டெக்ஸ்சில் துணி எடுக்க முடியவில்லை மின்வாரிய ஊழியர்கள் குற்றச்சாட்டு

திருமங்கலம், நவ.8: அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தீபாவளிக்கு எடுக்க வேண்டிய துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி முடிந்தபின்பு எடுக்கமுடியாமல் திருமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி துணிகள், போர்வை உள்ளிட்டவை தவணை முறையில் (கடனுக்கு) எடுத்துக் கொள்ளும் சலுகை உள்ளது. உரிய உயர் அதிகாரி கையெழுத்து இட்ட படிவத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காட்டி தேவைக்கு ஏற்ப துணிமணிகளை பெற்று கொண்டு மாதந்தோறும் அதற்குரிய தொகையை ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இதனை அரசு ஊழியர்கள் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் பலரும் கோ-ஆப்டெக்ஸ்சில் தங்களது தேவைக்கேற்ப துணிமணிகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்கி பணம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் இந்த ஆண்டு மின்வாரிய வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு இதுவரை கோ-ஆப்டெக்ஸ் படிவம் பெற்றும் துணிகளை எடுக்க முடியவில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியும் உயர் அதிகாரி கையெழுத்திட மறுப்பதால் தீபாவளி முடிந்தும் துணிகளை வாங்க இயலவில்லை. மத்திய, மாநில அரசுகள் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்துங்கள் என விளம்பரங்கள் கொடுத்தும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களாலேயே துணிகளை வாங்க இயலவில்லை. இதனால் ஊழியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில்,`` ஒவ்வொரு ஆண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நாங்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் துணிகளை எடுத்து கொள்வோம். அதற்கு ஊதியத்தில் மாதந்தோறும் தவணை முறையில் தொகையை பிடித்து கொள்வர். ஆனால், இந்த ஆண்டு எங்களது அதிகாரி ஒருவர் கையெழுத்து போடாததால் கோ-ஆப்டெக்ஸ்சில் துணிகளை எடுக்க முடியவில்லை. தீபாவளியும் முடிந்து விட்டது’’ என்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ரமணியிடம் கேட்ட போது, `` இது சம்பந்தமாக எனக்கு புகார் வந்தது. அந்த துறை அதிகாரி பதவி உயர்வில் செல்வதால் தயங்கியதாக தெரிய வந்தது. இருப்பினும் கையெழுத்து போடும்படி கூறியுள்ளேன்’’ என்றார்.

Related Stories: