தீபாவளி விடுமுறை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடுமலை, நவ. 8: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு உடுமலை பஞ்சலிங்க அருவி மற்றும் அமராவதி அணையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

 தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் உடுமலையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர். திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் சுற்றுலா பயணிகளும், அமாவாசை, பவுர்ணமி தினத்தில் அதிகளவு பக்தர்களும் இங்கு வருவார்கள்.

நேற்று முன்தினம் தீபாவளி, மறுநாள் அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கானோர் திருமூர்த்தி மலையில் குவிந்தனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு பஞ்சலிங்க அருவியில் உற்சாக குளியல் போட்டனர். நான்கு நாட்களில் 4 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 இதேபோல், அமராவதி அணைக்கும் சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்கு 8 பேர் பயணிக்கும் படகு உள்ளது. இதில் குடும்பத்துடன் சவாரி செய்து, அணையின் அழகை ரசித்தனர். அணை அருகே உள்ள பூங்கா மற்றும் முதலை பண்ணைக்கும் சென்றனர். 400 பேர் படகு சவாரி செய்ததாக படகு இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்: திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தபோதும் அங்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. வாகனம் நிறுத்த இடம் இல்லாததால், சுற்றுலா வாகனங்களை ரோட்டோரமே நிறுத்தி சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதலில் வந்தவர்கள் வாகனங்களை திரும்ப எடுத்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதுபோன்ற விசேஷ நாட்களில் தளி போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: