கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

பொள்ளாச்சி, நவ.8:   பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு, ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

 பொள்ளாச்சி நகரில் உள்ள புதிய பஸ் நிலையத்திலிருந்து, கேரள மாநில பகுதிக்கு செல்லும் பஸ்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அண்மை காலமாக நடந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது, நகர் மற்றும் கிராமங்களில் உள்ள பஸ் நிறுத்தம் இடங்களில், சிவில் சப்ளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு செல்லும் ரயில்களிலும், ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் கடந்த 2015ம் ஆண்டு வரை அகல பாதை பணியின்போது, ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அகல ரயில் பாதை பணி நிறைவுக்கு பின், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் போக்குவரத்து தினமும் அதிகாலை, மதியம், மாலை, இரவு என ரயில் இயக்கப்படுகிறது.

 இதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 5டன் வரை ரேஷன் அரிசி ரயிலில் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது சிவில்சப்ளை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் ரயிலில் பயணிகள் அமரும் இருக்கையின் கீழ் பகுதியில் வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: