ஆலைகள் விடுமுறை நாளிலும் நொய்யல் ஆற்றில் ஓடிய சாய கழிவு நீர்

காங்கயம், நவ. 8 : தீபாவளி விடுமுறை நாளிலும் நொய்யல் ஆற்றில் செல்லும் நீரில் சாய கழிவு கலந்து கருப்பாக தண்ணீர் ஓடுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  கடந்த சில வாரத்திற்கு முன் பெய்த கன மழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மழை வெள்ளத்தோடு சாயப்பட்டறை கழிவுகளை திறந்து விட்டதால் ஆற்றில் தண்ணீரில் அதிகளவு நுரை பொங்கி ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இந்நிலையில் தீபாவளி என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கம்பெனிகள், சாய ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் நேற்று முன் தினம் இரவு சாய ஆலைகள் பணியை நிறுத்தும் முன் இருக்கும் கழிவுகளை வெளியேற்றினர்.

 இதனால் நேற்று மதியம் ஒரத்துபாளையம் அணைக்கு 137 கனஅடி தண்ணீர் வந்தது. நீர் மட்டம் 4 அடியாக இருந்தது. தண்ணீரில் டி.டி.எஸ் 2100 ஆக இருந்தது. தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதில்லை என ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.  

 ஆனால் தீபாவளி விடுமுறை நாள் அன்றும் நீரில் டி.டி.எஸ் தன்மை குறைந்த பாடில்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து, நொய்யல் பாசன விவசாயிகள் கூறுகையில், நொய்யல் ஆற்றில் தொடர்ந்து சாய கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் ஆற்று பகுதியில் உள்ள போர்வெல் தண்ணீர் மாசடைந்து வருகிறது. கன மழையால் வந்த நல்ல நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை. கரையோரம் உள்ள பாசன பகுதியில் கிணறு, போர்வெல்லுக்கும் இந்த சாயநீர் கிடைக்கிறது. விளைநிலத்தில் எஞ்சியிருக்கும் தென்னையை காப்பாற்ற மாசடைந்த நீரை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது, என்றனர்.

Related Stories: