காவேரிப்பட்டணம் அருகே விதை நேர்த்தி செயல் விளக்கம்

கிருஷ்ணகிரி, நவ.8:  காவேரிப்பட்டணம் அருகே விதை நேர்த்தி முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள், “கிராமத் தங்கல்” திட்டத்தின் கீழ் ஜெகதாப் ஊராட்சிக்குட்பட்ட பாங்காதாதன் கொட்டாயில் பல்வேறு விதைநேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அப்போது மாணவிகள் கூறியதாவது: நல்ல பயிர் மற்றும் மகசூலின் முக்கிய ஆதாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான விதைகளே ஆகும். இந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க எளிய சோதனைகளே போதுமானது. நெல் விதைகளில் உள்ள பதர்களை பிரித்தெடுக்க உப்புக்கரைசலைப் பயன்படுத்தலாம்.

அதாவது 10 லிட்டர் நீருக்கு 2 கிலோ உப்பு என்ற விகிதத்தில் இக்கரைசலைப் பெறலாம். அக்கரைசலின் செறிவை முட்டை மிதத்தலின் மூலம் கண்டறியலாம். அதன் மேல்பாகம் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவு இருக்க வேண்டும். இவ்வாறு செறிவுடைய கரைசலில் நெல் மணிகளை போட்டால் அதில் மிதப்பவை பதர் ஆகும். அவற்றை நீக்கிவிட வேண்டும். அடியில் உள்ளவையே தரமான விதைகளாகும். இந்த விதைகளை இரண்டு முதல் மூன்று முறை தூயநீரில் கழுவி, நிழலில் உலரவைத்த பின் உயிரி உரங்களிலோ அல்லது உயிர் மக்கட்டுப்பாட்டுக் காரணிகளிலோ நேர்த்தி செய்த பின்பு விதைக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

அதேபோல், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கால்வேஅள்ளி ஊராட்சியில் உள்ள கத்தேரி கிராமத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் சத்து குறைபாட்டினை சீர் செய்ய உதவும் தாது உப்பு கலவை என்னும் ஊட்டச்சத்து கலவையின் நன்மைகளை விவசாயிகள் முன்னிலையில் விளக்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தாது உப்பு கலவை என்பது பல வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்த ஒரு கலவையாகும். இந்த கலவையை மாடுகளின் தீவனத்தோடு ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்து கொடுப்பதன் மூலம் மாடுகளுக்கு ஏற்படும் குறைபாட்டினை நீக்கலாம். மேலும், மாடுகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு, மடி வீக்கம், தைராய்டு போன்ற நோய்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகின்றன. மாட்டின் பால் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இந்த கலவை கால்நடை மருத்துவமனைகளிலும், வேளாண் அறிவியல் நிலையங்களிலும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்கிருஷ்ணகிரி, நவ.8:  ராயக்கோட்டையில் அ.தி.மு.க.வின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவரணி மாவட்ட துணை செயலாளர் நாராயணன், கெலமங்கலம் பேரூர் செயலாளர் திம்மராயப்பா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சந்திரன், கூட்டுறவு சங்க இயக்குனர் முனுசாமி, துணை தலைவர் குச்சிகுமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புருஷப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பங்கேற்று, தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், இலக்கிய அணி இணை செயலாளர் துரையரசன், தலைமை கழக பேச்சாளர் கோமுகிதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய, கிளை, கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. கொடி ஏற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Related Stories: