சாலையோரத்தில் குப்பை எரிப்பதால் கடும் புகை மூட்டம்

தர்மபுரி, நவ.8:  தர்மபுரி எஸ்வி ரோடு நகராட்சி சுடுகாடு அருகே சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், குடியிருப்பு பகுதி மற்றும் சாலையோரங்களில், குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரே, எஸ்வி ரோடு நகராட்சி சுடுகாடு எதிரே சாலையோரத்தில் 7 இடங்களில் குவியல் குவியலாக குப்பை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது.

கொளுந்து விட்டு எரிந்த தீ, கரும்புகை மூட்டத்துடன் மின்கம்பிகளை உரசியபடி சென்றது. தொடர்ந்து இவ்வாறு குப்பை எரிக்கப்பட்டால் மின் விபத்து ஏற்பட அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரே எஸ்வி ரோடு ஒரம் கொட்டப்படும் குப்பைகள், தீவைத்து எரிப்பது, தொடர்கதையாக உள்ளது. இதனால் ஏற்படும் புகைமூட்டம் காரணமாக, அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories: