இலக்கியம்பட்டி ஏரியில் தேங்கிய பச்சை கழிவு நீர்

தர்மபுரி, நவ.8: இலக்கியம்பட்டி ஏரியில் கழிவுநீர், மழைநீர் தேங்கி மாசடைந்து பச்சைநிறத்தில் கழிவு நீர் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தர்மபுரி-சேலம் மெயின்ரோட்டில் 4.5 ஏக்கரில் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வத்தல்மலை அடிவாரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வத்தல்மலையில் இருந்து வரும் மழைநீர் தடைபட்டது. மேலும், நீர்வரும் கால்வாய் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேவரும் கழிவுநீர் மற்றும் வர்ணபகவான் கருணையில் கொட்டும் மழைநீர் மட்டுமே இலக்கியம்பட்டி ஏரிக்கு தற்போது நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது.

இந்த ஏரியை தர்மபுரி மக்கள் மன்றத்தின் இளைஞர்கள் தூர்வாரி, அழகுபடுத்தி குப்பைகள், புதர்கள் அகற்றப்பட்டது. ஏரியை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை அமைத்தனர். ஏரியை சுற்றி மரக்கன்று நடுவில் தீவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொக்குகள், நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் வந்து வசிக்கும் வகையில் இந்த தீவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தண்ணீர் இல்லாமல் ஏரி வறண்டுள்ளது. ஒரு சில இடத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீர் நாள் கணக்கில் தேங்கியதால், மாசுஅடைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஏரிக்கு வத்தல்மலையில் இருந்து மழைநீர் வரும் கால்வாய்  ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர வழி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: