நெல்லையில் தீபாவளி கொண்டாட்டம் லட்சுமி பூஜையுடன் புதுக்கணக்கு தொடங்கிய வடஇந்தியர்கள்

நெல்லை, நவ. 8:நெல்லையில் குஜராத், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை டவுன் பகுதிகளில், வடஇந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நெல்லை டவுனில் ஜெயின் கோயிலும் உள்ளது. இந்நிலையில் இந் தாண்டு தென்மாநில மக்கள் 6ம் தேதியும், வடமாநிலத்தினர் 7ம் தேதியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தென்மாநிலங்களில் நரகாசுரன் வதம் தீபாவளி நாளாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு லட்சுமி பூஜை செய்கின்றனர்.

தீபாவளி தினத்தில் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவதை, வட இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளிக்கு அடுத்த முதல் அமாவாசை நாளில், லட்சுமி குபேர பூஜை முறையை கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் புதிய கணக்கு நோட்டை லட்சுமி தேவியின் படத்தின் முன் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் அலுவலகங்கள் வைத்துள்ள வட இந்தியர்கள் நேற்று புது கணக்கு நோட்டை, லட்சுமி தேவி படத்துக்கு முன் வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நோட்டை அடுத்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயன்படுத்துவர்.

மேலும் இனிப்பு பலகாரங்களை தயாரித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

Related Stories: