ஊருக்குள் புகுந்து சரமாரி தாக்கிய 4 பேருக்கு வலை: போலீசார் குவிப்பு

பாகூர், நவ. 8: பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகர் பகுதிக்கும், சோரியாங்குப்பம் பகுதி இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரியார் நகரை சேர்ந்த ஆசாத் (25), விஜயகுமார் (23), செல்வேந்திரன் (24) ஆகியோர் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சோரியாங்குப்பத்தை சேர்ந்த அருண்குமார், தியாகராஜன், பாலகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் இரும்பு ராடு, பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் குருவிநத்தம் பெரியார் நகருக்குள் புகுந்து ஆசாத் உள்ளிட்ட 3 பேரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆசாத், புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகுமார், செல்வேந்திரன் பாகூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊருக்குள் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி குருவிநத்தம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாகூர் இன்ஸ்பெக்டர்கள் கவுதம் கணேஷ், செந்தில்குமார் விரைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாதாரண பிரச்னையை கூட, சாதி பிரச்னையாக மாற்றி தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதுவரை 3 முறை இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதனால் நிம்மதி இழந்து வாழ்ந்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யவும் வலியுறுத்தினர். 3 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடந்தது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின்பேரில், மறியலை கைவிட்டனர்.

இதற்கிடையே, ஊருக்குள் புகுந்து ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார், தியாகராஜன், பாலகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க குருவிநத்தம் பகுதியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: