புதுச்சேரியில் தடையை மீறி பட்டாசு வெடித்த 25 பேர் மீது வழக்கு

புதுச்சேரி,   நவ. 8: புதுச்சேரியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது காவல்துறை   வழக்குபதிவு செய்துள்ளது. இதுதவிர பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 20 சிறுவர்கள்   அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 தீபாவளி   பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கால நிர்ணயம் விதித்தது.   அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே   பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனை பின்பற்ற   புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

 அதன்படி டிஜிபி சுந்தரி நந்தா   உத்தரவின்பேரில் காவல்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில்   ஈடுபட்டிருந்தனர். முன்கூட்டியே விழிப்புணர்வு பேனர்களும்   காவல்துறை சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

  உச்சநீதிமன்ற உத்தரவை சிலர் மட்டுமே பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தனர். ஆனால் பலர் எதனையும் பொருட்படுத்தாமல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஒருசிலரை மட்டும்  போலீசார் எச்சரித்து அனுப்பினர்.  அவர்களின் பெயர், முகவரி   விபரங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

உருளையன்பேட்டை,   நெல்லித்தோப்பு தொகுதிகளில் அடுத்தடுத்து தடையை மீறி பட்டாசு வெடிப்பதாக புகார்கள்   கோரிமேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது.  தீபாவளி தினத்தன்று புதுச்சேரி   மற்றும் அதை சுற்றியுள்ள தமிழக பகதிகளில் பட்டாசு வெடித்து கையில்   காயமடைந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்திராகாந்தி அரசு   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

 புதுச்சேரியை சேர்ந்த   விக்னேஷ் ராஜ், பரணிதரன் உள்ளிட்ட 4 சிறுவர்கள் கையில் பட்டாசு வெடித்ததில்   ஆள்காட்டி விரல், நடுவிரல்கள் துண்டானது. மற்றவர்கள்  வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு   திரும்பினர்.

 புதுச்சேரியில் பகல் மற்றும் இரவில் தடை   செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது காவல்துறை   வழக்குபதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவில் மட்டும்   காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 15க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.   அதன்பேரில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தனித்தனியாக இவ்வழக்குகள்   பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் தடையை மீறி 150  பேர் எச்சரித்து   அனுப்பப்பட்டனர். இவ்வழக்கின் மீது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது   அபராதம் விதிக்கப்படலாம் என்பதால் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு   வெடித்து சிக்கியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: