சரியான சிகிச்சை இல்லாமல் கைதிகள் மரணம் அதிகரிக்கும் அபாயம் 10 மாதங்களில் 15 கைதிகள் இறப்பு வேலூர் மத்திய சிறையில்

வேலூர், நவ.8:வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் கைதிகள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் 15 கைதிகள் இறந்துள்ளனர்.வேலூர் சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் மரணமடையும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. பொதுவாக வேலூரில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் கோடை வெயிலை தாங்க முடியாமல், தங்களை வேறு சிறைக்கு மாற்றுபடி வேலூர் சிறையில் உள்ள கைதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பார்கள்.

ஆனால் தற்போது சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலானோர் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறைக்குள் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ மருத்துவமனை உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லையாம்.இதனால் சிறையில் கைதிகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டால், முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக கைதிகள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஆனால் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில், வேலூர் சிறையில் உள்ள கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சில மாதங்களாக தொடர்கிறது. கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலு திடீரென உடலகுறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை இன்றி உயிரிழந்தார்.வேலூர் மத்திய சிறையில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் நேற்றைய தேதி வரை நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வேலூர் சிறையில் கைதிகள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: