மைனர் பெண்கள் கடத்தல் வழக்கு .... ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை:  சென்னையைச் சேர்ந்த குணசுந்தரி (17) என்ற 12ம் வகுப்பு படிக்கும் மைனர் பெண் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள ரவியை (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) காதலித்து கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து, அந்த  மைனர் பெண்ணின் தாய் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ரவியை போலீசார் கைது செய்தனர். மைனர் பெண் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவியுடன் அந்த மைனர் பெண் மீண்டும் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து, தனது மகளை மீட்கக்கோரி மைனர் பெண்ணின் தாய் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி ஆஜர்படுத்தினர்.

 வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த பெண் தனது தாயுடன் செல்ல விரும்புகிறார். எனவே, அவரை தாயுடன் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டார். மேலும், நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மைனர் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். அல்லது காதலர்களுடன் ஓடிபோய் உள்ளனர். எத்தனை மைனர் பெண்கள் வயதுக்கு அதிகமானோருடன் அல்லது திருமணம் ஆனவருடன் ஓடியுள்ளனர் என்பது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு டிஜிபி பதில் தருமாறு உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: