கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவு திறப்பு

கரூர், நவ. 2: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் திறந்து வைத்து, வீரராக்கியத்தில் நடைபெற்ற சிறப்பு சித்த மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது குறித்து கலெக்டர் கூறியுள்ளதாவது:

பராம்பரியமாக சித்தர்கள் கண்டுபிடித்தது சித்த மருத்துவம். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது ஆயுர்வேதம். உருது மொழியில் எழுதப்பட்டது யுனானி மருத்துவம். இவை தவிர ஓமியோபதி மருத்துவமும் உண்டு. கரூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கரூர் மாவட்டத்தில் 21 சித்த மருத்துவம், 1 ஆயுர்வேதம், 3 யுனானி, 3 ஓமியோபதி மருத்துவ பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு வேலை நிமித்தம் காரணமாக வருகை தரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சித்த மருத்துவப் பிரிவு இன்று(நேற்று) முதல் செயல்படுகிறது. இந்த பிரிவில், சர்க்கரை  நோய், இருதய நோய்,

மூட்டுவலி, இடுப்பு வலி, ரத்த கொதிப்பு, தைராய்டு நோய் உட்பட 112 வகை மருந்துகள் உள்ளன. சித்த மருத்துவத்தை பயன்படுத்தும் போது, எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே, அனைத்து தரப்பு பொதுமக்களும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும்.

சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரராக்கியம் கிராமத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். வீரராக்கியத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமில் 850 நபர்கள் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்தும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், அரசு சித்த மருத்துவர்கள் சுரேஷ்குமார், செந்தில்வடிவு, நீலகண்டன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: