வடகிழக்கு பருவமழை துவங்கியது உக்கிரன்கோட்டை பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

மானூர், நவ. 2:  வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து உக்கிரன்கோட்டை பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நெல்லை அருகே உள்ள உக்கிரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி, சிற்றாறு பாசன வசதியை பெற்றாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. சிற்றாறு பாசனம் இல்லாத புஞ்சை நிலங்களும் உள்ளன. இதில் கிணற்று  பாசனம் உள்ள விவசாயிகள் நெல் நடவு  செய்வதும், மற்ற விவசாயிகள் வட கிழக்கு பருவமழையை நம்பி சோளம், பயறு போன்றவை பயிரிடுவதும் வழக்கம். மேலும் கால்நடை  வளர்ப்பும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தின் பிரதானமாக உள்ளது. நடப்பாண்டில் நேற்று வடகிழக்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்தாண்டைவிட மழை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதே இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து இருப்பதால் உக்கிரன்கோட்டை பகுதி விவசாயிகள், தங்களது நிலங்களில் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர். வயல்களை சமன்படுத்துதல், உழுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து உக்கிரன்கோட்டை பகுதி விவசாயி கூறியதாவது: இந்த பகுதியில் விவசாயத்தை நம்பியே அநேக கிராமங்கள் உள்ளன. இந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட மழை  காரணமாக சிற்றாற்று பாசனம் உள்ள பகுதிகளில் குளங்களுக்கு தண்ணீர்  வந்துள்ளன. கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வானிலை மைய அறிவிப்பு மற்றும் மழையை எதிர்பார்த்து நெல் நடவு பணிகளை துவங்கி உள்ளோம். வருண பகவான் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம். என்றார்.

Related Stories: