உத்தனப்பள்ளி அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

சூளகிரி, நவ.2: உத்தனப்பள்ளி அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தனப்பள்ளி அருகே நீலகிரி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவதிக்குள்ளான பெண்கள், நேற்று காலை அங்குள்ள கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில், உத்தனப்பள்ளி எஸ்ஐ மஞ்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில், பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: