மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்செங்கோடு, நவ.2: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் பயிரிட்ட விவசாயிகள், வரும் 30ம் தேதிக்கு முன் பயிர் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில், மல்லசமுத்திரம்  வட்டாரம் கீழ்முகம் மற்றும் மாமுண்டி ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரி பயிர்  காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம், மாமுண்டி கிராமத்தில் உதவி வேளாண் இயக்குனர் சண்முகம்  தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சம்பா பருவ நெற்பயிரிட்டுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு பிரீமியத் தொகை ₹580 செலுத்த வேண்டும். இதன் மூலம் ₹29 ஆயிரம் காப்பீடு தொகை கிடைக்கக்கூடும். காப்பீடு செய்ய கடைசி நாள் வரும் 30ம் தேதி ஆகும். இந்த பிரீமியத் தொகையை, விவசாயிகள் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்களில் செலுத்தலாம்,’ என்றார். இந்த கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர்  அலாவுதீன், வட்டார  தொழில்நுட்ப மேலாளர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: