காவிரி மாசடைவதை தடுக்க சாயக்கழிவுநீரை பயன்படுத்தி மரம் வளர்க்கும் திட்டம்

திருச்செங்கோடு, நவ.2: அகில பாரத துறவியர்கள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அன்னை காவிரி திருவிழா மற்றும் காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை, நேற்று திருச்செங்கோடு இறையமங்கலம் காவிரி கரைக்கு வந்தது. யாத்திரையில் கொண்டு வரப்பட்ட காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர்  சென்னிமலை சித்தர் சரவணானந்தா சரஸ்வதி, மதுரையை சேர்ந்த மாதாஜி வித்யாம்பா சரஸ்வதி, பழனி மெய்தவஅடிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின்னர், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மாதாஜி அன்னை ஞானேஸ்வரி கூறியதாவது: பவானி, குமாரபாளையம், ஈரோடு, பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரியில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க, மத்திய அரசுக்கு கடிதம்  கொடுத்துள்ளோம். காவிரி கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கழிவுநீரை தேக்கி சுத்திகரித்து, குழாய் மூலம் கொண்டுசென்று அந்த நீரை பயன்படுத்தி, மரம் வளர்க்கும் திட்டத்தை அரசுக்கு தெரிவித்தோம். இந்த திட்டத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இப்பகுதிகளில் உள்ள அனைத்து சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து, ஒரு மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: