கொட்டித்தீர்த்த கனமழையால் வீடு, கடைகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்தது

ராசிபுரம்,  நவ.2:ராசிபுரத்தில் நேற்று காலை வெயில்  சுட்டெரித்த நிலையில், மதியம் 12 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன.  மதியம் 2 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் அரை மணி  நேரம் பெய்த கனமழையால் ராசிபுரம் நகராட்சி 3 வார்டுக்குட்பட்ட காமாட்சி  பெருமாள் சந்து, கிருஷ்ணன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில்  வெள்ளம் பெருக்கெடுத்தது. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால்  கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் இருந்த  10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு கழிவுநீர்  புகுந்தது. வீடுகளில் இருந்த தரைமட்ட தொட்டிகளுக்குள் கழிவுநீர்  புகுந்ததால், அதில் தேக்கி வைத்திருந்த குடிநீர் முழுவதும் வீணானது. வீடுகள்  மற்றும் கடைகளில் தரைகளில் இருந்து பொருட்கள் சாக்கடை கழிவுநீரால்  சேதமடைந்தது. இதையடுத்து அவசர அவசரமாக அவற்றை மக்கள்  அப்புறப்படுத்தினர். ஆனால், வீடுகளுக்கு வெளியே சாலைகளில் தேங்கிய கழிவுநீர் வெளியே வழியின்றி, கடும் துர்நாற்றம் வீசியது. பல ஆண்டுகளாக தூர்வாராத சாக்கடையை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: