பள்ளிபாளையத்தில் 2 கிலோ மீட்டர் நீள வாய்க்காலை காணோம்

பள்ளிபாளையம், நவ.2: பள்ளிபாளையத்தில் இருந்த 30 அடி அகலம், 2 கி.மீ நீளம் கொண்ட வாய்க்காலை  காணோம் என, தமிழ் தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நேற்று தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக தேசிய கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஆதவன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதனிடம் நேற்று ஒரு  புகார் மனு கொடுத்துள்ளார். அதில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், கடந்த  20 ஆண்டுகளுக்கு முன்பு 30 அடி அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட ஒரு  வாய்க்கால் இருந்தது. தற்ேபாது வாய்க்கால்  இருந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு வாய்க்காலை காணவில்லை.  வாய்க்கால் இருந்ததற்கான தடயங்களும் இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  கட்டடங்களாகவும், வீடுகளாகவும் காட்சியளிக்கிறது. அங்கிருந்தவர்களிடம்  கேட்டபோது, வாய்க்கால் குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அரசு  பதிவேட்டில் சர்வே எண் 214ல் வாய்க்கால் இருந்ததற்கான பதிவுகள் உள்ளது.  எனவே, வருவாய்த் துறையினருக்கு சம்மந்தமுள்ள இந்த வாய்க்காலை  திருடியவர்களிடம் (ஆக்கிரமித்தவர்கள்) இருந்து கண்டுபிடித்து மீட்க  வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ரகுநாதன், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: