214 கடைகளுக்கு அனுமதி திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை

நாமக்கல், நவ.2: தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 214 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிமாக பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை செய்ய மாவட்டம் முழுவதும் 249 கடை உரிமையாளர்கள் விண்ணப்பித்தனர். இதில் தகுதியான 214 பேருக்கு  தற்காலிக பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய லைசென்சு அளிக்கப்பட்டுள்ளது. 35 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை கட்டு கட்டாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பெட்டிகளை பிரித்து உதிரிகளாக (சில்லறையாக) விற்பனை செய்யக்கூடாது. கடைகளுக்கு வெளியே நின்றுதான் பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தல் தகரத்தில் தான் இருக்க வேண்டும். தீ அணைப்பான்கள், 200 லிட்டர் தண்ணீர், 10 மணல் வாளிகள் இருக்க வேண்டும். பட்டாசு கடைகளை ஒட்டி ஓட்டல், டீ கடைகள் இருக்க கூடாது.

பட்டாசு கடைக்கு அவசர வழியை விற்பனை செய்யும் போது திறந்து வைத்திருக்க வேண்டும். கடைக்குள் பட்டாசுகளை தவிர வேறு எந்த பொருட்களும் இருக்க கூடாது. பட்டாசுகளை திருமண மண்டபங்களில் வைத்து விற்பனை செய்ய அனுமதி கிடையாது. பட்டாசு கடைக்காரர்கள் உரிய விதிகளை கடைபிடித்து விற்பனை செய்யவில்லை என்றால், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 94450 00910 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: