போக்குவரத்துக்கழக ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை தமிழக அரசு வாய்மொழி உத்தரவு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று முதல்

வேலூர், நவ.2: தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 6ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளிமாவட்டங்களில் வேலை செய்பவர்கள், தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், பஸ்கள், ஆம்னி பஸ்களில் பயணத்துக்கான இருக்கை முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தீபாவளியையொட்டி 3ம் தேதி (நாளை) முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையிலும், வெளிமாநிலங்களில் இருந்தும், 20 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோட்ட நிர்வாக இயக்குனர்கள், மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, இன்று (2ம் தேதி) முதல் 8ம் தேதி வரை, டிரைவர்கள், கண்டக்டர்கள், கண்காணிப்பாளர்கள், கிளை உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பில் சென்றவர்களை இன்று முதல் பணிக்கு திரும்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ‘தீபாவளிக்கு, சொந்த ஊர் செல்லும் பயணிகள், சிரமம் இன்றி பண்டிகை கொண்டாட, வழக்கமான பஸ்களுடன், 20 ஆயிரம் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு மட்டுமின்றி, பகலிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு, பஸ்களை மாற்றி இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பிரிவு ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆகவே, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: