1.65 லட்சம் மஞ்சள் அட்டைகளுக்கு தீபாவளி துணி சலுகைகள் நிறுத்தம்

புதுச்சேரி,  நவ. 2:  புதுச்சேரியில் 1.65 லட்சம் மஞ்சள் அட்டைகளுக்கு தீபாவளி துணி சலுகைகள்  நிறுத்தப்பட்டது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.  புதுச்சேரியில்  தீபாவளி பண்டிகையையொட்டி சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு இலவச துணிக்கு  பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் என அமைச்சர் கந்தசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.  18 வயதுக்கு மேல்  உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் இலவச துணிக்கு பதிலாக ஒவ்வொரு நபருக்கு ரூ.500 அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச துணிக்கு பதிலாக நபர்  ஒருவருக்கு ரூ.500 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சிவில் சப்ளை  மூலமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக சிவப்பு நிற  அட்டைகளுக்கு தலா ரூ.1,275ம், மஞ்சள் அட்டைகளுக்கு தலா ரூ.675ம் அவரவரின்  வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.  அரசின்  இந்த அறிவிப்பு மஞ்சள் அட்டைதாரர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. மொத்தம் 3.42  லட்சம் ரேசன் கார்டுகள் உள்ள நிலையில் அதில் 1.77 லட்சம் சிவப்பு அட்டைகள்  அடங்கும். மீதமுள்ள 1.65 லட்சம் மஞ்சள் அட்டைதாரர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு கடந்த காலங்களில் தீபாவளி, பொங்கல் துணிமணிகள் அரசால்  வழங்கப்பட்டன. ஆனால் தற்போது சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே தீபாவளி  துணிக்கான சலுகைகளை அரசு அறிவித்துள்ளதால் மஞ்சள் அட்டை வைத்துள்ள மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல் அனைத்து  அட்டைதாரர்களுக்கும் தீபாவளி துணிக்கான சலுகைகளை அவரவரின் வங்கிக் கணக்கில்  செலுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தங்களது தொகுதி  எம்எல்ஏக்களிடம் மஞ்சள் அட்டைதாரர்கள் முறையிட்டு வருகின்றனர். அப்போது சிவப்பு நிற அட்டைகள் மாற்றப்பட்டதில்  முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏழைகளிடம் மஞ்சள் அட்டை  இருப்பதாகவும், வசதி படைத்தவர்கள், அரசு ஊழியர்கள் சிவப்பு அட்டை  வைத்துள்ளதாகவும் புகார்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிவப்பு, மஞ்சள்  அட்டைகளை மறுஆய்வு செய்ய குடிமை பொருள் வழங்கல் துறைக்கு அரசு  உத்தரவிட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்றன. இருப்பினும் எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மஞ்சள் அட்டைகளுக்கு  இலவச துணிக்கான சலுகையை அரசு அறிவிக்காதது பொதுமக்களில் ஒருதரப்பினரை  ஏமாற்றமடைய செய்துள்ளது. யாரையும் வஞ்சிக்காத வகையில் இச்சலுகையை அரசு  வழங்க வேண்டுமென கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது. கடந்த ஆண்டும் மஞ்சள்  அட்டைதாரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: