பொதுமக்கள் சீரமைத்த கழிவுநீர் கால்வாயை இடித்த பேரூராட்சி பணியாளர்கள்

சேலம், நவ.1:சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் பொதுமக்களே கட்டிய கழிவுநீர் கால்வாயை, பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சேலம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி 9வது வார்டில் உள்ளது கோ.மு.நகர். இங்குள்ள ஆர்சி.முத்துலைன் பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்வதற்காக 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் சிதிலமடைந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவ ஆரம்பித்தது. இதனால் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கோரிக்ைக எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்களே முன்வந்து, ₹60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குழாய்கள் பதிப்பு சாக்கடை சீரமைப்பு பணிகளை முடித்துள்ளனர்.

இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் (30ம்தேதி) சீரமைக்கப்பட்ட சாக்கடையை தோண்டி குழாய்களை உடைத்து எறிந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பகுதிமக்கள் கூறுகையில், ‘உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மக்களின் கோரிக்கைகள் எதையும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாங்களே சாக்கடையை சீரமைத்தோம். இதற்காக செயல்அலுவலர் பொறுப்பில் உள்ளவரை சந்தித்து, நாங்களே பணிகளை மேற்கொள்வதாக கூறினோம். மேஸ்திரி ஒருவரை அனுப்பி ஆய்வு செய்த பிறகு, பணிகளை செய்ய ஆட்ேசபனை எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து ₹60 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகளை முடித்தோம். ஆனால் நாங்கள் அனுமதி பெறவில்லை என்று பொய்யை சொல்லி, சாக்கடை குழாய்களை உடைத்து நாசப்படுத்தி விட்டனர். இது குறித்து உயரதிகாரிகளிடம் முறையிட உள்ளோம்,’ என்றனர்.இது குறித்து செயல்அலுவலர் (பொ) சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘சம்மந்தப்பட்டவர்களுக்கு பேரூராட்சி சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாமல் பதிக்கப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: