இன்டர்நெட் வசதி கேட்டு லேப்டாப் ஒப்படைத்து விஏஓக்கள் போராட்டம்

சேலம், நவ.1: அனைவருக்கும் இன்டர்நெட் வசதி என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் லேப்டாப், சிம்கார்டுகளை ஒப்படைத்து விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) பணிபுரிந்து வருகின்றனர். வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை வழங்க, பெரும்பாலான விஏஓக்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான இன்டர்நெட் வசதி, அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை களைய வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் உள்ள விஏஓக்கள் தற்செயல் விடுப்பு எடுத்ததுடன், லேப்டாப், சிம் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டவுன் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட செயலாளர் கலையரசு தலைமையில் திரண்ட விஏஓக்கள், தங்களது லேப்டாப்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் சரவணன் ஆகியோர் கூறுகையில், “இ-சேவைகளுக்கென ேலப்டாப் வழங்கப்பட்டத்தில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மின்சாரமே இல்லாத அலுவலகங்களில் லேப்டாப்பை எப்படி பயன்படுத்த முடியும்?. இதிலும், பெரும்பாலானோருக்கு இணையதள வசதி ஏற்படுத்தவில்லை.

இதனால், நெட் சென்டர்களுக்கு படையெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேசமயம், இ-அடங்கலும் கணினி மூலமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருநாளில் பெற வேண்டிய அடங்கலுக்கு, ஒரு மாதத்திற்கு மேல் அலைய வேண்டும் என்பதால், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாவட்டத்தின் 13 தாலுகாக்களில் உள்ள 320 விஏஓக்கள் லேப்டாப் மற்றும் சிம்கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து, வரும் 8ம் தேதி, ஒரு விஏஓ, கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம கணக்குகளை ஒப்படைத்தல், 12ம் தேதி வட்டார கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 19ம் தேதி பெருந்திரள் தர்ணா என தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம்,’’ என்றனர். இதில், வட்டார செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் ஜெயபால், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: