மேச்சேரி பேரூராட்சியில் சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணி தீவிரம்

மேச்சேரி, நவ.1: மேச்சேரி பேரூராட்சியில், சாக்கடை அடைப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேச்சேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மேச்சேரி பேரூராட்சியின் ஒட்டுமொத்த கழிவுநீரும் வெளியேற்றும் வகையில் அங்குள்ள மேச்சல் ஏரியில் விடப்படுகிறது. ஆனால், மேச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், சாக்கடை அடைப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கபட்டது. இந்தநிலையில் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் மதிவாணன், பிரபு நங்கவள்ளி சாலையில் சாக்கடையில் இறங்கி அடைப்புகளை தூர்எடுத்தனர். ஆனால், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், அவர்கள் பணி செய்தது நோய் தாக்குதலை உண்டாக்கும் நிலை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த பேரூராட்சி அலுவலர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களை கண்டித்து, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையில் இறங்கி பணி செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

Related Stories: