அடிப்படை ஊதியம் ரூ.15,700 கேட்டு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், நவ. 1:  தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க அலுவலர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15,700 கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் போனஸ் ரூ.3,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன் துவக்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் சிறப்புரையாற்றினார். வட்ட தலைவர் அமிர்தலிங்கம்,

அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, வட்ட செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில மகளிரணி உறுப்பினர் சுகுணா நன்றி கூறினார். மேலும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஆண்டிமடம் :  தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.31 முதல் நவ.2 வரை மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை முன்னிட்டு நேற்று ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாட்ட பொருளாளர் கணபதி தலைமை வகித்தார். வட்டார தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார். முடிவில் வட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: