ஜெயங்கொண்டம் அருகே சம்பவம் நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் திறப்பு

பெரம்பலூர், நவ. 1:  பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க நன்னை (மேற்கு) கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.3.02 கோடிக்கு மதிப்பீடு ஒப்புதலாகி பணி நிறைவு பெற்றதால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, கல்லை, அந்தூர், கிளியூர், பரவாய், கிழுமத்தூர், வடக்கலூர், எழுமூர், ஆண்டிகுரும்பலூர் மற்றும் வரகூர் கிராம பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதோடு மங்களமேடு துணை மின் நிலையத்தில் தற்போதுள்ள மின்பளு குறைக்கப்பட்டு அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் மற்ற கிராம பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் 12,036 மின் நுகர்வோர்களுக்கு தரமான மற்றும் சீரான மின்விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் மத்திய அரசின் தீனதயாள் உபாத்தியாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நன்னை கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நன்னை கிராமத்தில் நடந்த விழாவில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்பி சந்திரகாசி, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் இனிப்பு வழங்கினர். பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, கோட்ட பொறியாளர் பிரகாசம் மற்றும் மின் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: