சிவகாசி பகுதியில் பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு சுகாதாரக்கேடு

சிவகாசி, நவ. 1: சிவகாசியில் இரவில் கடும் பனியும், பகலில் கடுமையான வெயிலும் வீசுவதால், பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இடையில், அவ்வப்போது மழை பெய்து, வெயிலின் தாக்கத்தை குறைத்தது. ஆனால், தற்போது பருவநிலை மாறி இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இரவு 12 மணிக்கு மேல் பனி விழுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். முதியவர்கள், சிறுவர்கள் மாலை நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்குகின்றனர். காலை நேரங்களில் 7 மணி வரை பனிப்பொழிவு உள்ளது. பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தவிக்கின்றனர். ஆனால், காலை 7 மணிக்கு மேல் கடும் வெயில் வாட்டுகிறது. இதனால், பகல் நேரங்களில் அதிக புழுக்கம் காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சிவகாசியில் பகலில் வெயிலும், இரவில் பனியும் வீசுவதால் மக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவி வருகிறது.

காய்ச்சல் காரணமாக பலர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல குழந்தைகள், பெண்களுக்கு சரும நோய்களும் பரவுகிறது. பருவநிலை மாற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெம்பக்கோட்டை வட்டார பகுதியில் நெல் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பயிரில் குலைநோய், பூச்சிக்கடி நோயால் சாகுபடி பாதிப்படைந்து வருகிறது. தொடர்ந்து இந்நிலை நீடித்தால், நெல் மகசூலில் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: