மாவட்டம் ஒரு மாதத்திற்கு பின் குமுளி மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து

கூடலூர், நவ.1: குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஒரு மாதமாக நடந்து வந்த சாலை சீரமைப்பு பணி முடிவடைந்ததையடுத்து நேற்று காலை முதல் வாகன போக்குவரத்து துவங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குமுளி மலைச்சாலையில் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டது. தற்காலிக சீரமைப்பு பணியை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் செப்.25ல் மீண்டும் பெய்த கனமழை காரணமாக, சாலை பலப்படுத்துவதற்காக அடுக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் முத்து உடையார் பார்வையிட்டு ஓரிரு நாளில் போக்குவரத்து துவங்கும் என்றார். ஒரு மாதத்திற்கு பின் ேநற்று காலை முதல் குமுளி மலைச்சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல போலீசார் அனுமதியளித்தனர். குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்களும், கேரளா செல்லும் தோட்ட தொழிலாளர்களும் மகிழ்சியடைந்துள்ளனர்.

Related Stories: