கலெக்டர் அலுவலக பெயரில் விவசாயிகளுக்கு போலி கடிதம்

தேனி, நவ. 1: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர், தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு வந்தனர். அங்குள்ளஅதிகாரிகளிடம், தங்களுக்கு மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், எங்கள் நிலங்களில் மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் எங்களது பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் எங்கள் நிலங்களில் மொச்சை, தட்டைப்பயிறு போன்ற தானியங்களை பயிர்செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். இதனைக்கேட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை நாங்கள் அனுப்பவில்லை என்று விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விவசாயி அரசு கூறுகையில், ``எங்கள் பகுதியை சேர்ந்த 25 விவசாயிகள் தற்போது தட்டை மற்றும் மொச்சைப்பயறு சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்நிலையில் நாங்கள் மணல் கடத்துவதாக, மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் கனிம வளத்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கடிதத்தை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை’’ என்றார். இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ``கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கடித உறை மூலம்தான் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கனிம வள கடத்தல் தடுப்புப் பிரிவு என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு துறையே இங்கு இல்லை. பதிவுத் தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2 ரூபாய் தபால் தலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில 1, 4, 5 மற்றும் 10 ரூபாய் ஸ்டாம்புகளையே பயன்படுத்துகிறோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: