மருத்துவமனை எதிரில் கழிவுநீர் குளம் சிகிச்சை பெற வந்தவர்கள் மீண்டும் நோயாளியாகும் நிலை ஆண்டிபட்டியில் அவலம்

ஆண்டிபட்டி, நவ.1: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2006ம் ஆண்டு முதல்  செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக  தங்கி சிகிச்சை பெற 900 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  மருத்துவமனையில் 170 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 280 க்கும் மேற்பட்ட செவிலியர்களுடன்  பணியாற்றி வருகின்றனர். இங்கு பொதுநல பிரிவு , தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, ஸ்கேன் சென்டர், எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டர், எலும்பு முறிவு சிகிச்சை  பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மருத்துவமனைக்கு நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டமின்றி கேரளா மாநிலத்திலிருந்தும்  ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் மருத்துவமனை எதிரில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி நோயாளிகளையும், பொதுமக்களையும் கடித்து வருகிறது. ஏற்கனவே, மர்மக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவர்கள் கொசுக்களால் மேலும் நோயாளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  வைரமுருகன் கூறுகையில், `` மருத்துவமனையின் எதிரில் தனியார்  உணவு விடுதி உள்ளது. இந்த விடுதியின் எச்சில் இலை, பேப்பர் கப்புகள் உள்ளிட்டவைகளை ஆங்காங்கே திறந்து வெளியில் போட்டு விடுகின்றனர். மேலும் கழிவுநீர் குளம் போன்று தேங்குவதால் அதிகம் கொசுக்கள்  உற்பத்தியாகிவ வருகிறது, மேலும் செப்டிக் டேங்க் திறந்து காணப்படுவதால் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது’’ என்று தெரிவித்தார். எனவே, சுகாதாரத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு கழிவுநீர் தேங்குவதை அகற்றுமாறு பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: