பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் மூடிக்கிடக்கும் கழிவறை கேள்விக்குறியாகும் சுகாதாரம்

பெரியகுளம், நவ.1:  தென்கரை பேரூராட்சி பகுதியில் மூடிக்கிடக்கும் கழிவறையை பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள் திறந்து வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி உள்ளது. இதில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி மாநில அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றது. தற்போது இந்த பேரூராட்சி பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கைலாசப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் சாலைகள் கழிப்பறையாக மாறி வருகிறது.  மேலும் குப்பைகளையும் சாலை வழிகளில் கொட்டுகின்றனர். இதனை சரிவர அள்ளாததால் குப்பைகள் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதேபோன்று டி.கள்ளிப்பட்டி பகுதியிலும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்துள்ளது. 4வது வார்டில் உள்ள வள்ளியம்மை தெருவில் பெண்களுக்கான கழிப்பறை ஏற்கனவே இருந்தது. அதனைப் பயன்படுத்தாமல் விட்டதால் தற்போது மூடியே கிடக்கிறது.

இதன் அருகே உள்ள கழிப்பறை சுயஉதவிக்குழு மூலம் பராமரிக்கப்படுகிறது. இருந்தபோதும் காலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டும் கழிவறையை திறந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி பெண்கள் மிகவும் வேதனையடைகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் சாலையை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு குப்பையும் குவிந்து கிடக்கிறது. எனவே, பெண்கள் முழுமையாக கழிவறையை பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் சுகாதாரத்தை பேணிக்காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது டெங்கு உள்பட பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வரும் சூழ்நிலையில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: