கறம்பக்குடியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்தி ஆகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

கறம்பக்குடி, அக். 30: கறம்பக்குடியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகிறது. இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் சடையன் தெரு, சேவுகன் தெரு, வடக்குத்தெரு, குலக்காரன் தெரு, தென்னகர், அக்ரகாரம்  தட்டாவூரணி, நரங்கியப்பட்டு, சுலைமான் நகர் போன்ற 15 வார்டுகள் காணப்படுகின்றன. பேரூராட்சியில்  50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளில் உள்ள தெருக்கள் அனைத்திலும் சரிவர வரத்து வாய்க்கால்கள் மற்றும் வடிகால் பகுதிகள்  தூர்வாரி சீரமைக்கப்படாததால் காட்டு பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் பெய்கின்ற மழை நீரானது அனைத்து தெருக்களிலும்  வரத்து வாரிகளில் செல்வதற்கு வழி இல்லாமல் அப்படியே தேங்கி விடுகின்றன. குறிப்பாக கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட உள்கடை வீதி, செட்டி தெரு, பேருந்து நிலையம் பின்புறம்,

மீன் மார்க்கெட் பகுதி,  அம்புக்கோவில் முக்கம், நரிக்குறவர் காலனி செல்லும் சாலை , சீனிக்கடை முக்கம், குலக்காரன் தெரு ஆகிய அனைத்து தெருக்களிலும் 15 நாட்கள் ஆனாலும் மழை நீரானது தேங்கியே காணப்படுவதால் தேங்கிய நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.

இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியும்  ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக கறம்பக்குடி டவுன் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காய்ச்சல் கொசுக்கள் மூலம் வேகமாக பரவி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை காய்ச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அனைத்து தரப்பு பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: