மறியலில் ஈடுபட்ட 750 சத்துணவு ஊழியர்கள் கைது சுயஉதவி குழுவினர் சத்துணவு சமைத்தனர் திருவண்ணாமலையில் 2வது நாளாக

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 750 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு சுயஉதவி குழுவினர் சத்துணவு சமைத்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் அந்தந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், அரசு சார்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாததால் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று, கடந்த 29ம் தேதி சத்துணவு ஊழியர் வேலையை புறக்கணித்து தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து நேற்றுமுன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இரண்டாவது நாள் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார்.

அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் இருக்க டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, பழனி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 ஆண்கள் மற்றும் 700 பெண்கள் என மொத்தம் 750 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.சத்துணவு ஊழியர்கள் பள்ளிகளுக்கு சென்று சமையல் செய்யாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கு மாற்று ஏற்பாடாக 2வது நாளாக நேற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் பள்ளிகளில் சத்துணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதனை வட்டார வளர்ச்சி அலவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு சத்துணவு முறையாக வழங்கப்பட்டதா ஆய்வு செய்தனர்.

Related Stories: