தனியார் சர்க்கரை ஆலை பொது ஏலம்

* ₹6 கோடி நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் முற்றுகை * ஏலம் கேட்க யாரும் வராததால் அதிகாரிகள் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலையை ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தங்களுக்கு சேர வேண்டிய ₹6 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடி கிராமத்தில், கடந்த 2001ம் ஆண்டு அருணாச்சலம் என்ற பெயரில் அதிநவீன தனியார் சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. நிர்வாக குளறுபடி காரணமாக, தொடர்ந்து ஆலையை நடத்த முடியவில்லை. இதனால் கடந்த 2003ம் ஆண்டு இறுதியில் ஆலை இழுத்து மூடப்பட்டது.மேலும், ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த சுமார் 1,800 விவசாயிகளுக்கு சேர வேண்டிய ₹6 கோடி கரும்பு கொள்முதல் நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. மேலும், ஆலை தரப்பில் வழங்கிய காசோலையும் (செக்) வங்கியில் இருந்து பணம் இல்லாமல் திரும்பியது. ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், தீர்வு கிடைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை செயலிழந்து மூடப்பட்டுள்ளதால், அதில் உள்ள இயந்திர தளவாடங்கள் அனைத்தும் உருகுலைந்துள்ளன. ஆலையை தொடங்க கடனுதவி வழங்கிய வங்கிகளுக்கு சேர வேண்டிய தொகையும் கிடைக்கவில்லை. கடன் வழங்கிய வங்கிகள் தரப்பில் ஆலையை பொது ஏலம் விட முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன்படி, டெல்லியில் உள்ள கடன் வசூல் நடுவர் மன்ற உத்தரவின்படி மரபுசாரா எரிசக்தித்துறை சார்பில் பொது ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இயந்திர தளவாடங்கள் ₹25.33 கோடி, கட்டிடம், இடம் ஆகியவை ₹15.59 கோடி உள்பட மொத்தம் ₹40.92 கோடிக்கு ஏலம் விடுவதற்கான நோட்டீஸ், தனியார் சர்க்கரை ஆலை முன்பு ஒட்டப்பட்டது. மேலும், பொது ஏலம் நடத்துவதற்கான அதிகாரிகள் மற்றும் வக்கீல் சோனியாசிங் ஆகியோர் நேற்று தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.இந்த தகவல் அறிந்ததும், அருணாச்சலம் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் உட்பட 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டனர். ஏலம் நடந்த தனியார் ஆலையை முற்றுகையிட்டனர். எனவே, பதற்றமான நிலை உருவானது. இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பொது ஏலம் விடுவதை தடுக்க மாட்டோம், ஏலம் எடுப்பவர்கள் எங்களுக்கு சேர வேண்டிய தொகையை அளித்த பிறகே இங்கிருந்து பொருட்களை கொண்டுசெல்ல அனுமதிப்போம். தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெறுவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஏலம் விடும் தொகையில் முதலில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்காவிட்டால், தீக்குளிப்போம் என ஆவேசமாக விவசாயிகள் தெரிவித்தனர்.விவசாயிகளிகன் கடும் எதிர்ப்பு காரணமாக, ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. மாலை 4 மணி வரை காத்திருந்த அதிகாரிகள், ஏலத்தை நடத்தாமல் திரும்பி சென்றனர்.

Related Stories: