கலெக்டர் அலுவலகத்தில் தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு நிலத்தை அபகரிப்பதால் விரக்தி

திருவண்ணாமலை, அக்.30: நிலத்தை அபகரித்துக்கொண்டதால் விரக்தி அடைந்த தந்தை, மகன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் ரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், டிஆர்ஓ ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த வில்வாரணி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரன்(55), அவரது மகன் கார்த்திகேயன்(27) ஆகியோர் மனு அளிக்க வந்தனர். ப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்கள் கொண்டுவந்த பொருட்களை சோதனை நடத்தியப்பின் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

அப்போது, பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணையை எடுத்து, உடலில் ஊற்றிக்கொண்டு சங்கரன், கார்த்திகேயன் ஆகியோர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, போலீசார் விரைந்து வந்து மண்ணெண்ணையை பாட்டிலை பறிமுதல் செய்தனர்.தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பது குறித்து கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதைதொடர்ந்து இருவரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், எச்சரித்து விடுவித்தனர். மேலும், வந்தவாசி அடுத்த அம்மனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 110 பேருக்கு விண்ணப்பம் அளித்தும் அதிகாரிகள் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறைதீர்வு கூட்டத்தின்போது கலெக்டர் முன்னிலையில், அனைத்துத்துறை அதிகாரிகளும் நேர்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: