8 முகமூடி ஆசாமிகளுக்கு வலை செய்யாறு அருகே நள்ளிரவில் துணிகரம்

செய்யாறு, அக்.30: செய்யாறு அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் நள்ளிரவில் புகுந்த முகமூடி ஆசாமிகள், இரவு காவலாளி உட்பட 3 பேரை இரும்பு கம்பியால் தாக்கி ₹1.90 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பாராசூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. கடந்த 27ம் தேதி வகுப்புகள் முடிந்து அன்று மாலை வழக்கம்போல் கல்லூரியை பூட்டிவிட்டு சென்றனர். இங்கு எறையூர் கிராமத்ைத சேர்ந்த வஜ்ஜிரவேலு(52) இரவுக்காவலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் அன்றிரவு பணியில் ஈடுபட்டார்.

மேலும், தற்போது கல்லூரியில் கட்டிட வேலைகள் நடைபெறுவதால் அங்கேயே 2 நபர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் முகத்தை துணியால் மூடியபடி சுமார் 30 வயது மதிக்கத்தக்க 8 மர்ம ஆசாமிகள் கல்லூரிக்குள் நுழைந்தனர்.தொடர்ந்து கல்லூரி வராண்டாவில் படுத்திருந்த வஜ்ஜிரவேலு மற்றும் கட்டிட தொழிலாளர்களை திடீரென இரும்பு ராடால் தாக்கி, அவர்கள் வைத்திருந்த கத்தியை காட்டி ‘சத்தம்போட்டால் கத்தியால் குத்திவிடுவோம்’ என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் 3 பேரும் கூச்சலிடாமல் அமைதியாக இருந்தனர். இரும்பு ராடால் தாக்கியதில் அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

பின்னர், அந்த ஆசாமிகள், அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று அங்குள்ள ஒரு வகுப்பறையில் தள்ளி அறையை வெளிபக்கம் தாழ்ப்பாள் போட்டு பூட்டினர். பின்னர், அங்குள்ள அலுவலக அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ₹1.90 லட்சம் பணத்தை எடுத்து சென்றனர். இதையடுத்து, வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்ட காவலாளி வஜ்ஜிரவேலு மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நீண்ட நேரமாக போராடி கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னர், கல்லூரி நிர்வாகி நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் நேற்றுமுன்தினம் இரவு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: