கோயிலுக்குள் 7,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி * பாதுகாப்புக்காக போலீசார் முடிவு * திரையில் நேரடி ஒளிபரப்பு திருவண்ணாமலை பரணிதீபம், மகாதீப தரிசனத்துக்கு

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, பரணி தீபம் மற்றும் மகாதீப தரிசனத்துக்கு கோயிலுக்குள் 7,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க போலீசாரல் முடிவு செய்யப்பட்டுள்ளது. 14 இடங்களில் அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக, 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.

அதையொட்டி, பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது, அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக போலீசார் முக்கிய முடிவு மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையைவிட, இந்த ஆண்டு 25 சதவீதம் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பரணி தீபத்திற்கு அதிகபட்சம் 2,500 பக்தர்கள், மகா தீபத்திற்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிப்பது எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அதேபோல், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ₹500 மற்றும் ₹600 கட்டண தரிசன டிக்கெட் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளனர். கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், பரணி தீபம், மகா தீப தரிசனத்தை நேரடியாக அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, அதிகாலை நடைபெறும் பரணி தீப விழாவை, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் அருகிலும், வடக்கு கட்டை கோபுரம் அருகில் உள்ள கலையரங்கத்திலும் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாலையில் நடைபெறும் மகா தீப பெருவிழாவை, ராஜகோபுரத்தின் வலதுபுறம், இடதுபுறம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி, கலையரங்கம், மகிழ மரம், உள்துறை அலுவலகம், பெரிய தேர் நிலை நிறுத்துமிடம், முனீஸ்வரன் கோயில் அருகில் மற்றும் காந்தி சிலை அருகில் என மொத்தம் 14 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட உள்ளன.

பரணி தீபம், மகாதீப விழா நடைபெறும் 3ம் பிரகாரத்துக்குள் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக, இந்த மாற்று ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோயிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை பாதுகாப்பு எனும் பெயரில் குறைப்பது பக்தர்களிடையே ெபரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: