மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தலைமை ஆசிரியரை கண்டித்து முற்றுகை பள்ளியில் தலைமுடியை வெட்டியதால் வேதனை

ஆரணி, அக்.25: ஆரணியில் சகமாணவர்கள் முன்னிலையில், தலை முடியை வெட்டியதால் வேதனையடைந்த, பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் காலனியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் டெல்லிகணேஷ்(17). இவர் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தலை முடியை சரிவர வெட்டிக்கொள்ளாமல் பள்ளிக்கு ஒழுங்கீனமாக வந்தாராம்.இதைப்பார்த்த தலைமை ஆசிரியை மகேஸ்வரி, முடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருமாறு பலமுறை அறிவுறுத்தியும், மாணவன் கேட்கவில்லையாம். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் நீண்ட தலைமுடியுடன் டெல்லிகணேஷ் பள்ளிக்கு வந்தார்.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியை சங்கவை, ஆகியோர் சகமாணவர்கள் முன்னிலையிலேயே, டெல்லிகணேசின் தலை முடியை கத்திரியால் வெட்டினார்களாம். மேலும், பியூன் சரவணனை அழைத்து தலைமுடி முழுவதையும் வெட்டச் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் மனவேதனையடைந்த டெல்லிகணேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் அபிராமி, உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, நாட்டு மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாணவன் இனிமேல் பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி உள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியை மகேஸ்வரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், இனி இதுபோல் தவறு நடக்காது என சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த அவர்கள், ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில், டிஎஸ்பி செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வரிடம் விருதுபெற்ற மாணவன்

மாணவன் டெல்லிகணேஷ் மாவட்ட, மாநில அளவில் நடந்த ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சிறந்த ஓவியம், கட்டுரை போட்டிகளில் மாவட்டத்தில் முதலிடம் வெற்றி பெற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சான்று பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில், மாணவனின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள்.

Related Stories: