குடிநீர் தொட்டியை சுத்தமாக பராமரிக்காத அரசு பள்ளிக்கு நோட்டீஸ் சப்-கலெக்டர் அதிரடி வேட்டவலத்தில் டெங்கு ஒழிப்பு பணி ஆய்வு

வேட்டவலம், அக்.25: வேட்டவலம் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த. சப்-கலெக்டர்(பயிற்சி) பிரதாப், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாத அரசு பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கினார்.வேட்டவலம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பேருராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சப்-கலெக்டர் (பயிற்சி) பிரதாப் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி வீதியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்தார். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கிணற்றை பார்வையிட்டு, அதில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்க உத்தரவிட்டர்.பின்னர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் தொட்டியின் மேல்மூடி உடைந்தும், சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சப்-கலெக்டர், குடிநீர் தொட்டி மற்றும் கழிவறையினை சுத்தம் செய்ய அறிவுத்தினார். மேலும், குடிநீர் தொட்டி மற்றும் கழிவறையை முறையாக பராமரிக்காத பள்ளிக்கு பேரூராட்சியின் செயல் அலுவலர் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் மையத்தில், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர், அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை கடைகளில் வழங்கினார். மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், துணிப்பைகளை பயன்படுத்தவும் என்ற ஸ்டிக்கர்களை கடைகளில் ஒட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஆய்வின்போது, செயல் அலுவலர் (பொறுப்பு) சுகந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன் உட்பட பலர் உடன் இருந்தனர். வேட்டவலம் பேரூராட்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி) பிரதாப், டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

Related Stories: