நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் வெறிச்செயல் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி

சென்னை: மண்ணிவாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர் அலறி கூச்சலிட்டதால் நிர்வாணமாக்கி உடல் முழுவதும் பிளேடால் கிழித்தனர். இதை தடுக்க வந்த கணவன் உட்பட 2 பேரையும் வெட்டுவிட்டு தப்பினர். ஓட்டேரி அடுத்த மண்ணிவாக்கம், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சகிராபானு (22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மொய்தீன் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 4 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மொய்தீன் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த மொய்தீன், சகிரா பானுவை சரமாரியாக தாக்கி ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகைகள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இதையடுத்து, சகிரா பானுவை தனி அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றனர். அதில் அவர் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள், சகிராபானுவின் ஆடைகளை கிழித்து எறிந்துவிட்டு, உடல் முழுவதும் பிளேடால் கிழித்துள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற மொய்தீனை தாக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவர் ஓடிவந்தார். அவரையும் அடித்த மர்ம நபர்கள், 2 பேரின் காலிலும் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்து, ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினம்தினம் அச்சத்தில் வாழ்கிறோம்:

சகிராபானு கூறுகையில்; ‘‘மண்ணிவாக்கம் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்களிடம் ஈவு இரக்கம் இன்றி கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். கடந்த வாரம் எங்கள் உறவினர்கள் வீட்டில் ரவுடிகள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்து போலீசாருக்கு தெரிந்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. புகார் கொடுக்க சென்றால் இதுபற்றி வெளியில் கூறவேண்டாம் என்று எங்களை அனுப்பிவிடுகின்றனர். நாங்கள் தினம் தினம் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் இதற்கு ஒரு முடிவு இல்லையா’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Stories: