அரும்பாக்கத்தை தொடர்ந்து வளசரவாக்கத்திலும் கொள்ளையர்கள் அட்டூழியம் முதியவரிடம் செல்போன் பறித்து தரதரவென இழுத்து சென்ற கொடூரம்

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை மீட்பதற்காக முதியவர் போராடியவாறு, சாலையில் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் அடுத்த நெற்குன்றம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகே  நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்பது போல் நடித்து பேச்சு கொடுத்துள்ளனர். அவர் அசந்த சமயத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஜெயபாண்டியனின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, இருவரும் பைக்கில் தப்ப முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாண்டியன் உடனே கொள்ளயர்களிடமிருந்து தனது செல்போனை மீட்பதற்காக அந்த பைக்கின் பின்னால் உள்ள கைப்பிடியை பிடித்து இழுத்து பைக்கை நிறுத்த முயன்றார்.

ஆனால் கொள்ளையர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால், பைக்குடன் சேர்ந்து ஜெயபாண்டியனும் தரதரவென தரையில் தேய்த்தபடி இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின்னர் வலி தாங்க முடியாமல் பைக்கிலிருந்து கையை எடுத்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடியும் கொள்ளையர்களிடமிருந்து அவரது செல்போனை மீட்க முடியவில்லை. கடைசியில் கொள்ளையர்கள் செல்போனுடன் தப்பிவிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர்  ஜெயப்பாண்டியனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்களுடன் செல்போனை மீட்பதற்காக ஜெயபாண்டியன் போராடியவாறு, சாலையில் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரும்பாக்கத்தில் இதேபோல் ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் அவரை பைக்கில் சிறிது தூரம் தரதரவென இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சாலையில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கொடூரமான முறையில் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்திருந்தாலும் கொள்ளையர்கள் அட்டகாசம் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த சம்பவங்களை பார்க்கும்போது ஏற்கனவே கொலை நகரமாக மாறி வரும் சென்னை தற்போது கொள்ளை நகரமாகவும் மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: