மோசடி.. வழிப்பறி.. பறிமுதல்..

35 லட்சம் மோசடி: சகோதரர்கள் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை, மேனாம்பேடு சாலையில் இரும்பு பைப் விற்பனை செய்யும் ஏஜென்சி உள்ளது. இதன் உரிமையாளராக கோவிந்தராஜன் (58) என்பவர் உள்ளார். மதுரை, திருமாவூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் மேற்கூரை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றனர். இவர்கள், கடந்த 2017 நவம்பர் மாதம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கோவிந்தராஜன் கம்பெனிக்கு வந்து உள்ளனர். பின்னர், அவர்கள் தங்களது கம்பெனிக்கு தேவையான 52 லட்சம் மதிப்புள்ள இரும்பு பைப்புகளை கோவிந்தராஜிடம் இருந்து பெற்றுள்ளனர். பிறகு, அவர்கள் தாங்கள் வாங்கிய இரும்பு பைப்புகளுக்கு, 17 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். மேலும், அவர்கள் மீதமுள்ள 35 லட்சத்தை விரைவில் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

அதன் பிறகு, இவர்கள் கடந்த மாதம் 35 லட்சத்திற்கான காசோலையை கோவிந்தராஜனிடம்  வழங்கியுள்ளனர். இந்த காசோலையை, அவர் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து  மிரட்டல் விடுத்த செந்தில்குமார் (32) மற்றும் அவரது தம்பி ராஜ்குமார் (30) ஆகியோரை  நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

மாணவியிடம் 5.85 லட்சம் 20 சவரன் நகை பறிப்பு:

சென்னை: சென்னை ஜாம்பஜார் நாயர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுனில் (52). இவர் ேநற்று முன்தினம் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது மகள் நாகனா(17) ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் கடந்த 2016ம் ஆண்டு பிளஸ்-2 பொது தேர்வு எழுதினார். அந்த தேர்வில் அவர் 3 பாடங்களில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2017ம் ஆண்டு சைதாப்பேட்டையில் உள்ள டூடேரியலில் சேர்ந்து படித்தார். அப்போது அடையார் இந்திரா நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (20) என்பவரும் எனது மகள் படித்த டூடேரியலில் படித்தார். அப்போது, ஜெயலட்சுமி எனக்கு தெரிந்த ஆனந்தபாபு என்பவரிடம் பணம் கொடுத்தால் தோல்வியடைந்த பாடத்தில் தேர்ச்சி பெற செய்வார் என்று நாகனாவிடம் தெரிவித்துள்ளார்.

எனது மகள் நாகனா வீட்டிற்கு தெரியாமல் சிறுக சிறுக ஒரு ஆண்டாக 5.85 லட்சம் மற்றும் 20 சவரன் நகையை கொடுத்துள்ளார். ஆனால், சொன்னப்படி எனது மகள் நாகனா 3 பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் நகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவை தேடி வருகின்றனர்.

நகை பட்டறையில் 84 லட்சம் பறிமுதல்

சென்னை: மதுரை, ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டியன். பிரபல திருடன். சமீபத்தில் மதுரை போலீசார் ஆறுமுக பாண்டியனை கைது செய்து நடத்திய விசாரித்தபோது நகைகள் கொள்ளையடித்து, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள கடையில் நகை பட்டறை நடத்தும் பிரகாஷ் என்பவரிடம் விற்றதாக, வாக்குமூலம் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து அந்த கடையில் இருந்து 15 சவரன் நகைகளை மீட்டனர். இந்த பட்டறையில் சட்ட விரோதமாக திருட்டு நகை உருக்கப்படலாம் என்கிற சந்தேகம் இருப்பதாக போலீசார் உடனடியாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வருமானத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் நகைக்கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக கணக்கில் வராத 84 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, நகைப்பட்டறையின் உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் குமார் ஆகிய இருவரையும் பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே ஊழியர்கள் என கூறி தொடர் கைவரிசை: 4 பேர் கைது:

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன் (26). இவர் சென்னை மதுரவாயலில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.  கடந்த 13ம் தேதி சொந்த மாநிலம் செல்ல தனது நண்பர்கள் 2 ேபருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து கொண்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அர்ஜூனை சந்தித்து நாங்கள் ரயில்வேயில் வேலை செய்து வருகிறோம் உனக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை எடுத்து தருவதாக கூறி 50 ஆயிரம் வைத்திருந்த பை மற்றும் 3 செல்போன்களை பறித்து கொண்டு மாயமாகி விட்டனர். புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது 4 வடமாநில வாலிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் மகாடோ (24), முக்கேஷ் (19), பேச்சின் (19), பிரேம்ஜீத் குமார் (22) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கடந்த 11ம் தேதி இரவு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆசிஸ்(22) என்ற வாலிபரிடம் முன் பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக கூறி பெரியமேடு ஆர்.எம்.சாலைக்கு அழைத்து வந்து 15 ஆயிரம் பணம் 33 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் பறித்து ெசன்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: