வடசென்னை அனல்மின் நிலையத்தில் டிரஜ்ஜர் இயந்திரம் பழுது எண்ணூர் முகத்துவாரத்தில் மணல் குவியல்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரம் ஆற்றில் மணல் குவிந்து கிடப்பதால் ஆறு அடைபட்டு படகுகள் செல்ல முடியாமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர். எண்ணூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு உள்ள அலகு 1ல் 420 மெகாவாட் மற்றும் அலகு 2ல் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது இயந்திரங்கள் சூடாவதை கட்டுப்படுத்த எண்ணூர் முகத்துவார ஆற்றிலிருந்து கடல்நீரை எடுத்து குளிர்விக்கப்படுகிறது. பின்னர், மீண்டும் சுடு நீர் ஆற்றில் விடப்படும். இவ்வாறு குளிர்விக்கப்பட்ட பின்பு வெளிவரக்கூடிய சுடுநீர் ஆற்றில் விடும்போது மணல் குவியல் ஏற்படும். இந்த மணல் குவியலை டிரஜ்ஜர் எனக்கூடிய இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தப்படுவதோடு ஆற்றையும் ஆழப்படுத்தப்படும்.

இந்நிலையில், இந்த டிரஜ்ஜர் இயந்திரம் கடந்த சில மாதங்களாக சரியாக செயல்படவில்லை. இதனால் முகத்துவார ஆற்றில் மணல் மேடுகள் அதிகமாகி படகுகள் சரியாக செல்ல முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. டிரஜ்ஜருக்கு பதிலாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆற்றில் உள்ள மணல் குவியலை அப்புறப்படுத்த வடசென்னை அனல் மின் நிலையம் முடிவு செய்து கடந்த சில தினங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இயந்திரங்கள் மூலம் ஆற்றில் உள்ள மணலை முழுமையாக அப்புறப்படுத்த முடியாது. இதனால் பணமும், நேரமும் வீணாகும். எனவே, டிரஜ்ஜர் இயந்திரத்தின் மூலம் ஆற்றில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்தவும், ஆழப்படுத்தவும் வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘மீனவர்களின் தொழில் பாதிக்காத வகையில் முகத்துவார ஆற்றை ஆழப்படுத்த டிரஜ்ஜர் இயந்திரம் பயன்படுத்தபட்டு வந்தது. இவ்வாறு பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பராமரிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் முறையாக இந்த இயந்திரத்தை பராமரிக்காததால் தற்போது பல மாதங்களாக பழுதாகி உள்ளது. இயந்திரத்தை பராமரிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கணக்கு காண்பித்து பல கோடி ரூபாய் ஊழல் செய்கின்றனர். இந்த ஊழலை மறைப்பதற்காகவே தற்போது பொக்லைன் பயன்படுத்தி மணல் மேடுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. இது சரியான தீர்வாகாது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: