வருவாய்த்துறை உத்தரவை மீறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் அபராதம்

சென்னை: வருவாய்த்துறை செயலாளரின் உத்தரவை மீறி செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெகநாதன். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘எனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடு மந்தைவெளியில் உள்ளது. இதில் நான் 12 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாநகராட்சி விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக கூறி வீட்டை காலி செய்ய சென்னை மாநகராட்சி 2014ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து வருவாய்த்துறை செயலாளரிடம் முறையீடு செய்தேன். மாநகராட்சி நோட்டீசுக்கு வருவாய்த்துறை செயலாளர் தடை விதித்தார்.

இருந்தபோதிலும் மாநகராட்சி 13வது மண்டல நிர்வாக பொறியாளர் சுகுமார், உதவி நிர்வாக பொறியாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வீட்டை காலி செய்யும்படி கூறினர். மாநகராட்சி நோட்டீசுக்கு வருவாய்த்துறை செயலாளர் தடை விதித்ததை கூறியபோதும் உடல்நலம் சரியில்லாத எனது மனைவியை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி துரை ஜெயச்சந்திரன், முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை செயலாளரின் உத்தரவை மீறி செயல்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் 3 பேருக்கும் சேர்த்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், 3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: