வாசுதேவநல்லூரில் அபாய நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்

சிவகிரி, அக். 18:  வாசுதேவநல்லூரில் தினகரன் செய்தி எதிரொலியாக, இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட பழைய பேருந்து நிலைய பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றும் பணி துவங்கியது. வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே அரை கிமீ தொலைவில் கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், பழைய பேருந்து நிலைய பஸ் நிறுத்தம் உள்ளது. சுமார் 25 ஆயிரம் மக்கள் வசித்துவரும் வாசுதேவநல்லூரின் தென்பகுதியில் வாழும் மக்களும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சங்கனாப்பேரி, நெற்கட்டும்செவல், பச்சேரி, சுப்பிரமணியபுரம், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி போன்ற கிராம மக்களும் பழைய பேருந்து நிலைய பஸ் நிறுத்தத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனை இடித்துவிட்டு, இதே இடத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கடந்த 12ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவையடுத்து பாழடைந்து கிடந்த பழைய பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றும் பணி துவங்கி உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இடிந்த விழும் நிலையில் இருந்து பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் இதே இடத்தல் விசாலமான புதிய பயணிகள் நிழற்குடையை விரைந்து அமைக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Related Stories: