டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கொசு உற்பத்தியை கண்டறிய நடவடிக்கை

நாமக்கல், அக்.17:நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று கொசுப்புழுவை, பணியாளர்கள் அழித்து வருகின்றனர். இந்த பணியை சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் லட்சுமி, கொண்டிசெட்டிப்பட்டி கணபதிநகரில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி பெண்களை சந்தித்து, நல்ல தண்ணீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். கொசு உற்பத்தியை கண்டறியும் வருடாந்திர அட்டவணையை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் ஒட்டும் பணியை லட்சுமி தொடங்கிவைத்தார். அங்குள்ள 400 வீடுகளில் இந்த அட்டவணை ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நாமக்கல் நகரில் குப்பை தரம் பிரிக்கும் பணி, குப்பை கிடங்கில் உரம் தயாரிக்கும் பணி போன்றவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர்(பொ) கமலநாதன், சுகாதார அலுவலர் பேச்சிமுத்து ஆகியோர் கூறுகையில், தினமும் 6 வார்டு என்ற அடிப்படையில் நகராட்சியில் உள்ள 110 பணியாளர்கள் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வீடுகளில் இந்த அட்டவணை ஒட்டப்படும். அடுத்த வாரம் அந்த வீடுகளில் ஆய்வு செய்யும்போது, அங்கு கொசுப்புழுக்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டால் சுத்தமான வீடு என அறிவிக்கும் வகையில், மற்றொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதன்மூலம் மக்களும் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முன்வருவார்கள். இதுபோன்ற நடவடிக்கை நாமக்கல் நகராட்சியில் உள்ள 40 ஆயிரம் வீடுகளிலும் மேற்கொள்ளப்படும். வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றனர்.

Related Stories: