ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு

ராசிபுரம், அக்.17:ராசிபுரம் அருகே, கூனவேலம்பட்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதமாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி கிராமம் உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும், இக்கிராமத்தில், தறித்தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, கெங்கவல்லி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து ஜவுளி ரகங்கள், வேட்டி, துண்டு வகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் இரவு பகலின்றி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் சிலர் ஒரு வித மர்ம காய்ச்சலால், பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாமல் முடங்கி உள்ளனர். கை, கால்களில் வலி, மூட்டு மற்றும் நடப்பதில் சிரமம் என அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகாமல் உள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் மர்ம காய்ச்சல் நிலவி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கூனவேலம்பட்டியில், ஒரு வித மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். கை, கால்களில்தான் அதிக வலி ஏற்படுகிறது. மேலும் மூட்டு வலியால் நடப்பதற்கு சிரமமாக உள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் 2 ஆண்டாக செயல்படாமல், பூட்டிகிடப்பதால், நாமக்கல்லுக்கு செல்ல வேண்டி உள்ளது. தொடர் காய்ச்சலால் கடந்த ஒரு மாதமாக தொழில் செய்ய முடியாமல் இருந்து வருகின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  கடந்த வாரம் பிள்ளாநல்லூரில் மருத்துவ முகாம் நடத்தியும் பயனில்லை எனவும் கூறப்படுகிறது.

Related Stories: