டிஇஓ இன்சார்ஜ் விவகாரம் சிஇஓவை நேரில் சந்தித்து ஆசிரியர்கள் போர்க்கொடி

நாமக்கல், அக்.17: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, டிஇஓ இன்சார்ஜ் அளித்தது விதிமீறல் என சிஇஓவுக்கு எதிராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த அருளரங்கன் (56), முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று நேற்று முன்தினம், பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாறுதலில் சென்றார். இதையடுத்து அப்பணியிடம், மின்னக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலுக்கு கூடுதல் பொறுப்பாக முதன்மைகல்வி அலுவலர் உஷா வழங்கினார். இதற்கு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் அரங்கராஜன், முத்துசாமி ஆகியோர் தலைமையில் நேற்று 30க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் முதன்மைகல்வி அலுவலர் உஷாவை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர்.

அப்போது தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், மாவட்ட கல்வி அலுவலரும் ஒரே அந்தஸ்தில் பணியாற்றுகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருக்கும் போது, அந்த பணி கடந்த காலங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தான் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விதிமுறையை மீறி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அளிக்கப்பட்டிருப்பது, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக ஆவேசமாக கூறினார்கள். இதற்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இருப்பவருக்குதான் இன்சார்ஜ் தரப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி எதுவும் செய்யவில்லை. உங்களது கோரிக்கையை முன்பே தெரிவித்திருந்தால்,பரிசீலனை செய்திருப்பேன் என்றார். இதைக்கேட்ட தலைமை ஆசிரியர்கள்,முதன்மை கல்வி அலுவலர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது எங்களுக்கு  முன்கூட்டியே எப்படி தெரியும்? இதுதொடர்பாக எங்களிடம் கருத்து கேட்டிருந்தால் நிலைப்பாட்டை தெரிவித்திருப்போம் என்றனர்.

15 நிமிடத்துக்கு மேலாக இந்த பிரச்னை முதன்மை கல்வி அலுவலர் அறையில் எதிரொலித்தது. இறுதியில்,போட்ட உத்தரவை மாற்றஇயலாது என முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறிவிட்டார். இதையடுத்து மனக்குமுறலை கொட்டி தீர்த்த ஆறுதலுடன் முதன்மை கல்வி அலுவலர் அறையை விட்டு தலைமை ஆசிரியர்கள் வெளியேவந்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த மாவட்டத்தில் இது போன்ற அவமரியாதை இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை என்றனர். கடந்த 9 ஆண்டுக்கு முன், இம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்தவருக்கு எதிராக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்று திரண்டு தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு பின்,இம் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மைகல்வி அலுவலருக்கு எதிரான போக்கை எப்போதும் எடுத்ததில்லை. தற்போது, டிஇஓ பணியிடம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு இன்சார்ஜ் அளிக்கப்பட்ட விவகாரத்தில், 2 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து முதன்மை கல்வி அலுவலருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: