ஆண்டிபட்டி பகுதியில் நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

ஆண்டிபட்டி, அக். 17: ஆண்டிபட்டி பகுதியில் நெடுஞ்சாலைகளில் காய்ந்து நிற்கும் மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள வைகை அணையிலிருந்து க.விலக்கு வழியாக வருசநாடு செல்லும் நெடுஞ்சாலை, ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணை வழியாக பெரியகுளம் செல்லும் சாலை, ஆண்டிபட்டியிலிருந்து பிச்சம்பட்டி, ராஜதானி வழியாக வேலப்பர்கோயில் செல்லும் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.  இந்த சாலையின் ஓரங்களில் புளி, வேம்பு, வாகை உள்ளிட்ட பழமையான மரங்கள் காய்ந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் புளி, வேம்பு போன்ற மரங்கள் காய்ந்து சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே நிற்கின்றன. இதனால் மரங்கள் காற்றினாலும், மழையாலும் ஒடிந்து விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும்’ என்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் நெடுஞ்சாலைகளில் காய்ந்து நிற்கும் மரங்களை உடனே அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: